கோப்பை வென்றது விண்டீஸ் | ஜனவரி 13, 2020

தினமலர்  தினமலர்
கோப்பை வென்றது விண்டீஸ் | ஜனவரி 13, 2020

செயின்ட் ஜார்ஜ்: அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் எவின் லீவிஸ் சதம் கடந்து கைகொடுக்க விண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 3–0 என, முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்ற அயர்லாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விண்டீஸ் அணியுடன் மோதியது. முதலிரண்டு போட்டியில் வென்ற விண்டீஸ் அணி, 2–0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் (5), வில்லியம் போர்டர்பீல்டு (10) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ஆன்டி பார்பிர்னி (71) ஆறுதல் தந்தார். அயர்லாந்து அணி 49.1 ஓவரில் 203 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. விண்டீஸ் சார்பில் ஹைடன் வால்ஷ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சுலப இலக்கை விரட்டிய விண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் (6), சுனில் அம்ப்ரிஸ் (6) ஏமாற்றினர். விண்டீஸ் அணி 25.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை நின்ற பின், 47 ஓவரில் 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. அபாரமாக ஆடிய எவின் லீவிஸ் (102) சதம் கடந்து வெற்றிக்கு வித்திட்டார்.

விண்டீஸ் அணி 36.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிக்கோலஸ் பூரன் (43), ராஸ்டன் சேஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை